எண்பது வயதான எங்கள் மீசை தாத்தா, பேரர்களின் பாகப் பிரிவினைக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார். அவர் போனதால்தான் மற்றவர்களுக்கு பாகப்பிரிவினை செய்யும் துணிச்சலே வந்தது என்றுகூட சில உறவினர்கள் பேசிக் கொண்டார்கள்.
ஓடிப் போவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ‘எல்லோரையும் விட பரமார்த்தன்தான் அதிர்ஷ்டக்காரன்’ என்று என்னை பற்றி மீசை தாத்தா அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். அவரையும், என் மனைவி ஜமுனாவையும் தவிர வேறு எவரும் அதை நம்பவில்லை.