பொன்னொளி மடம்

பிரம்மபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு பொன்னொளிப் பித்தர் என்ற ஒரு அப்பாவி ஆன்மீகவாதி இருந்தார். அவர் பொன்னொளி மடம் என்ற பூரண யோக மடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அவருக்கு உதவியாக அவருடனே  மக்கானந்தர், கமலக்கூத்தர் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருமே பொன்னொளிப் பித்தரின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டவர்கள்.

மக்கானந்தருக்கு ஆன்மீகம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆன்மீக முறைகளை பின்பற்ற விரும்புவார். எல்லோருக்கும் நல்லவர். மிகவும் அப்பிராணி. கருணை மிகுந்தவர். ஆனால் நடைமுறை அறிவோ, லௌகீக சாமர்த்தியமோ சிறிதும் இல்லாதவர்.

கமலக்கூத்தர் எதையும் அறிவுபூர்வமாகப் பார்ப்பவர். பொருள்வாதி என்றுகூடச் சொல்லலாம். எது சரியோ, முறையோ அதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார், செய்துவிடுவார். நடைமுறை அறிவும், லௌகீக சாமர்த்தியமும் மிகுந்தவர்.

பொன்னொளி மடத்தில், தங்கள் சுயநலத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்ட சீடர்கள் உண்டு,  தாங்கள் அறியாமையால் செய்யும் ஒவ்வொரு செயல் மூலமும் பொன்னொளிப் பித்தருக்கு நெருக்கடி தருவதையே கடமையாகக் கொண்டவர்கள் இந்த சீடர்கள்.

சாதாரண மனிதராக இருந்தபோதிலும் இடைவிடாமல் பூரணத்தை நாடும் ஜீவனே பொன்னொளிப் பித்தர். அவர் எதிர்கொள்ளூம் சமூக,ஆன்மீக மரபுவாதமே மக்கானந்தர். அவர் எதிர்கொள்ளூம்  நவீன அறிவியல் பொருள்வாதமே கமலக்கூத்தர். பரிணாமத்தை நாடும் ஜீவன் மரபுவாதத்தோடும், பொருள்வாதத்தோடும் ஒவ்வொரு கணமும் மோதி, அந்த மோதலால் உருவாகும் போதத்தின் சாரத்தை இக்கதைகள் கண்டறிய முயல்கின்றன. வாழ்வெனும்  மாபெரும் வற்றாத ஜீவ நதியில் கணந்தோறும் நிகழ்ச்சிகளாகத் தோன்றி பிரம்மத்தின் இருப்பைக் காட்டி மறையும் நீர்க்குமிழ்கள்தான் சீடர்களும், அவர்களது லீலைகளும்.

பொன்னொளிப் பித்தர் கூறுகிறார், "என்னுள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் எதிரெதிரான மாபெரும் இயக்கங்கள்தான் மக்கானந்தரும், கமலக்கூத்தரும். அந்த இரண்டு பிரபஞ்ச இயக்கங்களும் சந்திக்கும் புள்ளியில்தான் நான் ஒவ்வொரு கணமும் பரிணமித்துக் கொண்டிருக்கிறேன், இந்த இயக்கங்களுக்கான ஊக்க சக்தியாக சீடர்கள்  செயல்படுகின்றனர்."

இக்கதைகள், ஏன் என் எல்லா படைப்புகளுமே, ஸ்ரீ அரபிந்தோ, மதர் ஆகியோரின் சிந்தனைகளை ஒட்டி உருவானவை. புத்த கதைகளையும், சென் (Zen) கதைகளையும் தழுவி, என் நோக்கத்திற்கேற்ப மாற்றி பல கதைகளை எழுதி இருக்கிறேன். சென் கதைகளைப் போல இந்தக் கதைகள் சிறிய அன்றாட நிகழ்ச்சிகளில் மறைபொருளாக இருக்கும் ஆன்மிகக் கருத்துக்களை குறிப்பால் உணர்த்துபவை. வாசகரின் அகநிலைக்கேற்ப பொருள் தரக் கூடியவை.

ஸ்ரீ அரபிந்தோவின், மதரின்  கருத்துக்களைக் கூறும் இக்கதைகளில் வரும் அனைத்தும் என் கற்பனையே. ஊரும், மடமும், கதாபாத்திரங்களும் என் கற்பனையே. அனைத்தும் என் படைப்புகளே, அனைத்தும் நானே என்பதை அவையடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!