ஜனாதிபதியும். சப்பாத்தும்

ஜனாதிபதியிடம் பரிசு வாங்க அசட்டு சந்துரு, கமலா டீச்சரோடு டெல்லிக்குப் போனான். அவனுக்கு புதிய உடைகளோடு, புதிய சப்பாத்துக்களையும் (ஷூ) அவன் அப்பா வாங்கித் தந்திருந்தார்.

போன இடத்தில் சந்துருவிற்கு கால்களில் கட்டி வந்துவிட்டது. அவனால் ஷூ போடமுடியவில்லை. "எல்லோரும் ஷூ போட்டுக் கொண்டு அழகாக வருவார்கள். நான் மட்டும் ஷூ போடாமல் போகவேண்டுமே! "  என்று அழுதான்.

கமலா டீச்சர், " ஷூ விஷயத்தில் முன்பு எப்போதாவது விஷமம் பண்ணியது உண்டா?" என்று கேட்டார்.

சந்துரு அழுது கொண்டே யோசித்தான். முன்பு ஒரு சமயம் ரவிக்கு அமெரிக்காவிலிருக்கும்  அவன் மாமா புது ஷு பரிசாகத் தந்தபோது தன்னிடம் அதுபோல ஷூ இல்லையே என்று பொறாமைப்பட்டது நினைவிற்கு வந்தது. யாருக்கும் தெரியாமல் ரவியின் புது ஷூ மேல் தான் மை கொட்டியதும் நினைவிற்கு வந்தது, ஷூ போடமுடியாமல் ரவி வருத்தப்பட்டதுவும் நினைவிற்கு வந்தது,

"சந்துரு கண்ணா, பொறாமைப்பட்டு அடுத்தவருக்கு கெடுதல் செய்தால் அந்த கெடுதல் நமக்கே நடந்துவிடும். செய்த தவறுக்காக வருந்தி, இனி பொறாமைப்பட மாட்டேன் என்று முடிவு செய்தால் நல்லது நடக்கும்," என்று கமலா டீச்சர் அன்போடு சொன்னார்.

சந்துரு  "இனிமேல் நான் பொறாமைப்பட மாட்டேன். நான் விஷமம் பண்ணியது தப்பு," என்றான்.

அப்போது அங்கே வந்த அதிகாரி, "ஜனாதிபதி, காந்தி சமாதியில் பரிசு தரப் பொகிறார். யாரும் ஷூ போட்டுக் கொண்டு வரக் கூடாது." என்றார்.

எல்லோரையும் போலவே சந்துருவும் ஷூ போடாமல் சந்தோஷமாகப் பரிசு வங்கிக் கொண்டான்.

அன்றிலிருந்து சந்துரு யார் மீதும் பொறாமையே படவில்லை.