சரியும், தவறும்

பொன்னொளிப் பித்தரின் மடத்தில் ஒரு சீடன் திருடி விட்டான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து அதே சீடன் மீண்டும் திருடினான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் மீண்டும் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

சீடர்களுக்கு கோபம் வந்து விட்டது. பித்தருக்குப்  பெரிய கடிதம் எழுதி கமலக்கூத்தர் மக்கானந்தர் தவிர பிற அனைவரும் கையெழுத்து போட்டனர்: 'தவறு செய்தவனை ஒரு முறை மன்னித்தீர்கள் அது சரிதான். மீண்டும் அதே தவறை அவன் செய்யும் போது அவனை  தண்டிக்காமல் இருப்பது சரியில்லை. எனவே நாங்கள் வேறு நல்ல ஆன்மீக நிறுவனத்திற்கு  போகிறோம்,' என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

சீடர்களை அழைத்தார் பித்தர்.  "தம்பிகளா! எது சரி, எது தவறு என்று உங்களுக்குத் தெரிந்து விட்டது. எனவே  நீங்கள் இந்த மடத்தை விட உயர்ந்த இடத்திற்குப் போவதுதான் முறை. இந்தத் திருடன் எது சரி, எது தவறு என்று இன்னமும் தெரியாமல் இருக்கிறான் அவனுக்குத்தான் நான் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே கையெழுத்து போட்ட எல்லோரும் போய் வாருங்கள்," என்றார்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)