பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த கோபிக்கு பேசும்போது வார்த்தை திக்கித் திக்கி வரும். ஏனென்றால் அவனுக்கு நாக்கில் ஏதோ சின்ன பிரச்சனை.
கோபிக்கு உதவுவதாக நினைத்துக் கொள்ளும் சந்துரு, அவன் பேச ஆரம்பித்தால், “நீ பேசாதே, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நான் மற்றவர்களுக்குச் சொல்கிறேன்,” என்று கூறுவான். கோபியைப் பேசவே விட மாட்டான்.
ஒரு நாள் சந்துரு பேசும்போது தவறான வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தினான். அதன் அர்த்தம் கூட அவனுக்குத் தெரியாது! உடனே கோபி திக்கியபடியே சொன்னான். “நாமெல்லாம் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பேசக் கூடாது,” என்றான்.
அப்போது கமலா டீச்சர், “கோபி சொல்வது சரிதான். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அர்த்தம் புரிந்து பேச வேண்டும். பிறரிடம் வெளியே தெரியும் குறையை வைத்து அவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று கர்வமாக நினைத்துக் கொள்ளக் கூடாது.” என்றார்.
திக்கிப் பேசும் கோபி தன்னை விட உயர்ந்த பேச்சுப் பழக்கம் உடையவன் என்பதை சந்துரு புரிந்து கொண்டான்.
அன்று முதல் அர்த்தம் அறிந்து அழகாகப் பேச சந்துரு முயற்சி செய்து வருகிறான்!