ஒருநாள் மதிய உணவு வேளையில் சந்துரு “எனக்கு போளி ரொம்ப பிடிக்கும். எத்தனை வேண்டுமானாலும் ஆசையோடு சாப்பிடுவேன்,” என்று ஆனந்தியிடம் கூறினான்.
“எனக்கும் போளி ரொம்ப பிடிக்கும். நானும் சாப்பிடுவேன்,” என்றாள் ஆனந்தி.
அப்போது அங்கே வந்த கமலா டீச்சர், “நாம் முன்னேற வேண்டுமானால் ஆசையை விட வேண்டும். அவசியத்திற்காக எதையும் செய்ய வேண்டும்,” என்றார்.
“ஆசையை எப்படி விடுவது?,” என்று கேட்டான் அசட்டு சந்துரு.
“எதைச் செய்ய ஆசைப்படுகிறோமோ, அதை முழுவதுமாக செய்து விட்டால் ஆசை போய்விடும். ஆனால் அது சிறந்த வழி அல்ல. எதைச் செய்ய ஆசைப்படுகிறோமோ, அதை துளி கூட செய்யாமலிருப்பது மற்றொரு வழி. அதுதான் நல்ல வழி” என்றார் கமலா டீச்சர்.
அன்று மாலை கோபிக்கு பிறந்த நாள் விழா நடந்தது. அங்கே நிறைய இனிப்பு போளி இருந்தது.
ஆனந்தி ஒரு போளியைக் கூட தொடாமல் மற்றவர்கள் சாப்பிடுவதை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவள் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது. போளி மீதிருந்த ஆசை போயே போய்விட்டது.
சந்துரு ஒரு பெரிய தட்டு நிறைய போளியை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டான். பத்து போளி சாப்பிட்டான். வயிறு போதும் போதும் என்று சொல்லியது. நாக்கை இனிப்பு ருசி திகட்டியது. 'ஏனடா இத்தனை போளி சாப்பிட்டோம்' என்று தோன்றிவிட்டது.. போளி மீதிருந்த ஆசை போய்விட்டது.
ஆசைப்படுவதை துளியும் செய்யாமல் இருந்து, ஆசையை விடுவதே நல்லது என்று அசட்டு சந்துருவிற்கு புரிந்தது.