ராதையின் பிரார்த்தனை

பார்த்த முதல் கணமே
என் ஜீவனின் தலைவனாகவும்
என் இறைவனாகவும்
நான் அறிந்தவனே!
என் காணிக்கையை ஏற்றுக் கொள்.

என் எண்ணங்கள்
என் உணர்ச்சிகள்
என் இதயத்தின் மிகையுணர்வுகள்
என் புலனுணர்வுகள்
என் வாழ்வின் இயக்கங்கள்
அனைத்தும் நீயே.

என் உடலின்
ஒவ்வொரு அணுவும் நீயே.
என் குருதியின்
ஒவ்வொரு துளியும் நீயே.

நான் முழுமையாக, மொத்தமாக
உனக்கு மட்டுமே உரியவள்.
நான் மிச்சமீதியின்றி
உனக்கு மட்டுமே சொந்தமானவள்.

நான் எதுவாக வேண்டுமென
நீ விருப்புறுதி கொள்கிறாயோ
நான் அதுவாக ஆவேன்.

நீ எனக்காக தேர்ந்தெடுப்பதுவே
எனக்கு விருப்பமானது.
வாழ்வோ மரணமோ,
இன்பமோ துன்பமோ,
சுகமோ துக்கமோ, உறவோ பிரிவோ,
உன்னிடமிருந்து வருவது மட்டுமே
எனக்கு உவப்பானது.

உன் பரிசுகள் ஒவ்வொன்றும்
எனக்கு இறைவன் தருவது.
அது ஒவ்வொன்றும் எப்போதும்,
உன்னதப் பேரின்பத்தை
உடனழைத்து வருகின்றது.