பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சந்துரு ஒரு நாள் பெரிய மூக்குக் கண்ணாடி போட்டான். மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்ததால் அழுதான்.
"மிஸ், எனக்கு மட்டும் ஏன் கண் கெட்டு பலவீனமாகி விட்டது?" என்று அழுது கொண்டே கமலா டீச்சரிடம் கேட்டான்.
அவனை அன்போடு சமாதானப் படுத்திய கமலா டீச்சர், "சந்துரு கண்ணா, பலவீனம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே பலம்தான். தேவையான நேரத்தில் பலவீனம் பலம் என்பது புரியும்," என்றார்.
ஒரு நாள் கமலா டீச்சர் எல்லா குழந்தைகளையும் சுற்றுலாவிற்காக ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றார்.
போன இடத்தில் திடாரென்று பெரிய காற்று வீசியது, காற்றில் பறந்த தூசியும், தும்பும் எல்லோருடைய கண்களிலும் விழுந்து எல்லோருக்கும் கண் தெரியாமல் போய்விட்டது.
சந்துரு கண்ணாடி போட்டிருந்ததால் அவன் கண்களில் தூசி விழவில்லை. அவனுக்கு மட்டும் கண் தெரிந்தது, அதனால் அவன் குடுகுடுவென்று ஒடிப் போய் நீரும், துணியும் கொண்டு வந்தான். எல்லோருடைய கண்களையும் துடைத்து, மீண்டும் பார்வை வர வைத்தான்.
கமலா டீச்சர் சந்துருவை பாராட்டி முதுகில் தட்டிக் கொடுத்தார். எல்லா குழந்தைகளும் அவனிடம் மன்னிப்புக் கேட்டு நன்றி கூறினர். எல்லோரும் சந்தோஷமாக காட்டை சுற்றிப் பார்த்தனர்,
'பலவீனம் என்று எதுவுமே இல்லை, எல்லாமே பலம்தான்,' என்பதை அசடான சந்துரு புரிந்து கொண்டான்.