தாத்தா வந்ததிலிருந்து அவரும், ஜமுனாவும் இடைவிடாது பேசிக் கொண்டே இருந்தனர். எனக்கு ஜமுனாவோடு பேச நேரமே கிடைக்கவில்லை. அந்த நேரத்தை சிவசங்கரனின் மென்பொருளை சீர் செய்வதில் செலவிட்டேன்.
‘என் அப்பாவால் நம் கம்பனிக்கு பெரிய நஷ்டம் வந்தது என்று பாட்டி கோபித்துக் கொண்டாராமே. அதன்பின் சமாதானமானாரா?’ என்று கேட்டாள் ஜமுனா.
‘யார் மேல்தான் அவள் கோபித்துக் கொள்ளவில்லை? உண்மை என்னவென்றால் உன் அப்பா செய்த காரியத்தால் கம்பனியின் விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்து பின் முன்னூறு சதவிகிதம் அதிகமாயிற்று’ என்றார் தாத்தா.
‘அது எப்படி?’ என்று கேட்டாள் ஜமுனா.